நான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுத்திவிட்டது! அவள் தரப்பில் அவள் அம்மா தெரியாது ஒரு காரியம் செய்யமாட்டாள். அவள் அமெரிக்கா சென்று படித்ததுகூட அவளுடைய அம்மா தந்த ஊக்கத்தால்தான். நான் என் அம்மாவிடம் எப்படி நடந்துகொள்கிறேன்? மேலோட்டமான விஷயங்கள் தவிர அந்தரங்கம் எதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன், யோசனை கேட்டிருக்கிறேன்? 

அவளுக்கும் தந்தை அற்பாயுளில் போய்விட்டார். மிகவும் சிக்கலான கூட்டுக் குடும்பம், இப்போது ஒரு வழியாக குடும்பத்தினர் பிரிந்து, சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது. என் தகப்பனார் என் சிறு வயதிலேயே இறந்துபோய்விடாமல் இருந்தால் என் வாழ்க்கை பாலக்காடும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கைக்கும் வாய்க்கும் எட்டாதபடி அமைந்திருக்கும்.

எனக்கு என் மாமாவைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. என் அந்தரங்கத்தை அவரிடம் சொல்லலாம். அவர் என் மாமனாராக இருந்தால்கூட ஒரு குருவாக எனக்கு வழிகாட்டுவார்.

- நூலிலிருந்து...